எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான பொது பிரிவு கலந்தாய்வுக்கான இணைய வழி பதிவு இன்று தொடங்க உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பு சேர்க்கையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 27 ஆம் தேதி நடந்தது. இதைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் 28 ஆம் தேதி கலந்தாய்வு நடந்தது. இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜனவரி 30-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை 10.00 மணி முதல் பிப்.1ம்தேதி நள்ளிரவு 11.59மணி வரை இணைய தளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் 5ம் தேதி வரை விரும்பும் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கான கலந்தாய்வுக்கான கட்டணம் 500 ரூபாய் ஆகும். தாங்கள் விரும்பும் கல்லூரிகள் உள்ளிட்டவற்றை ஆன்-லைன் வழியில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து 7ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புகளுக்காக அழைப்பு விடுக்கப்படும் எனவும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. மருத்துவ கல்வி இயக்குநரகம் குறிப்பிடும் மையங்களுக்கு மாணவர்கள் நேரில் சென்று உரிய சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 15-ஆம் தேதி, கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
ஒதுக்கீடு ஆணை பெறக்கூடிய மாணவர்கள், பிப்ரவரி 16ஆம் தேதி கல்லூரியில் சேர்வதற்கான ஆணையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பிப்ரவரி 17ம் தேதி முதல் 22ம் தேதிக்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும். பொது தரவரிசை 1 முதல் 10,456 வரை இடம் பெற்றுள்ள மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம். அதாவது நீட் மதிப்பெண் 710 முதல் 410 வரை பெற்றிருக்கக் கூடிய மாணவர்கள் இதில் அடங்குவார்கள்.
மருத்துவ படிப்பு சேர்க்கையில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு பங்கேற்கலாம் என்ற அட்டவணையை மருத்துவ கல்வி இயக்குனரகம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
7.5%: அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு உள் ஒதுக்கீடு போக மீதம் உள்ள 92.5% மருத்துவ இடங்களில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 3995 எம்பிபிஎஸ் இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 1390 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளது. அதேபோல், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 157 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 1666 இடங்களும் உள்ளன.








