திருச்செந்தூரில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி
கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களின் ஒன்றான மாசித் திருவிழா கடந்த
14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் சாமியும் அம்பாளும் தனித்தனியே பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

இதையும் படியுங்கள் : எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது.
இதனையொட்டி தெப்பக்குளத்தில் உள்ள நகரத்தார் மண்டபத்தில் சாமி
குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும்
அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சாமியும், அம்பாளும் மின்
விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்பக்குளத்தில் 11
முறை சுற்றி வந்து அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில் தெப்ப உற்சவ திருவிழா அழைப்பிதழில் வழக்கம்போல் இரவு 10.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் என அறிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 10 மணிக்குள் தெப்ப உற்சவம் நடைபெற்று முடிந்தது. குறிப்பிட்ட நேரத்தைவிட 1 மணி நேரம் முன்னதாகவே திருவிழா நடந்து முடிந்ததால் தெப்பத் திருவிழாவை காண வந்த பக்தர்கள் பலர் ஏமாற்றமடைந்தனர். இதுதொடர்பாக அறநிலையத்துறை உரிய விசாரணை மேற்கொண்டு, கோயில் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.