மாசிமக திருவிழா: மாமல்லப்புர கடற்கரையில் குவிந்த இருளர் பழங்குடி மக்கள்

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து இருளர் பழங்குடியின மக்கள் மாசி மகத் திருவிழாவிற்காக மாமல்லபுரக் கடற்கரையில் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், இருளர்களின் பாரம்பரிய திருவிழாவான “மாசிமகம்“  இன்று காலை…

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து இருளர் பழங்குடியின மக்கள் மாசி மகத் திருவிழாவிற்காக மாமல்லபுரக் கடற்கரையில் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், இருளர்களின் பாரம்பரிய திருவிழாவான “மாசிமகம்“  இன்று காலை தொடங்கியது. இதற்காக ஆயிரக்கணக்கான இருளர்கள் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், குடும்பம் குடும்பமாக  நேற்று இரவே மாமல்லபுரத்திற்கு வந்தனர்.
கடற்கரை ஓரத்தில் சேலைகளால் குடில்கள் அமைத்து அங்கு தங்கிய இருளர் பழங்குடி இன மக்கள், இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் அவர்களது குலதெய்வமான பச்சையம்மன், கன்னியம்மனை கடற்கரை பிடி மண்ணில் செய்து, படையலிட்டு, அரிசி மாவில் விளக்கு செய்து, அதில் தீபமேற்றி வழிபட்டனர்.
இந்த வழிபாட்டிற்குப் பின்னர், குழந்தைகளுக்கு மொட்டை போடுவது, சாமி ஆடுவது, திருமணம் நிச்சயிப்பது, திருமணம் நடத்துவது, குறி சொல்லுவது, குறி கேட்பது போன்ற அவர்களது பாரம்பரிய வழிபாட்டு முறைகளை மேற்கொண்டனர். மேலும் இன்று, இருளர் வழக்கப்படி 25க்கும் மேற்பட்ட திருமணங்களும் அங்கு நடந்தது.
இதன் பின்னர் அப்பகுதிகளில் உள்ள ஏரி,  கம்மாய், குளம், குட்டை பகுதிகளுக்குச் சென்று மீன்களை வேட்டையாடியும், மாமல்லபுரம் மார்க்கெட்டில் கறி, மீன் வாங்கி, திறந்த வெளியில் சமைத்து, குடும்பம் குடும்பமாகக் குடில்களில் அமர்ந்து விருந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இந்த மாசி மக விழாவிற்கு வருகை தந்துள்ள இருளர் இன மக்களின் போக்குவரத்து வசதிக்காகச், செங்கல்பட்டில் இருந்து சிறப்பு அரசு பேருந்துகள் இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது. மேலும் அங்கு பாதுகாப்பிற்காக, இரவு பகலாகப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.