மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கை, தேசிய புலனாய்வு முகமை எடுத்து விசாரணை மேற்கொள்ள கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டுவெடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகமது ஷாரிக் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து கர்நாடக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். முகமது ஷாரிக், தமிழகத்தின் கோவை, மதுரை, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு வந்து சென்றது விசாரணையில் அம்பலமானது. யாரை சந்தித்து சென்றார் என்ற கோணங்களில் விசாரணை நீண்டு கொண்டே இருக்கிறது.
இதனையடுத்து, நேற்று இந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐஆர்சி என்ற அமைப்பு பொறுப்பேற்றது. தட்சினகன்னடா மாவட்டம் கத்ரியில் உள்ள மஞ்சுநாத் கோவிலை முகம்மது ஷாரிக் தகர்க்க திட்டமிட்டதாக அந்த அமைப்பு வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த முயற்சியில் இலக்கை அடையவில்லை என்றாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இந்த குக்கர் குண்டு வெடிப்பு வழக்கை, தேசிய புலனாய்வு முகமை எடுத்து விசாரணை மேற்கொள்ள கர்நாடக உள்துறை அமைச்சகம் பரித்துரை செய்துள்ளது. இதுகுறித்து கர்நாடகா உள்துறை அமைச்சக கூடுதல் முதன்மை செயலாளர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் உபா சட்டத்தின் கீழ் வழக்கை விசாரிக்க என்.ஐ.ஏக்கு பரிந்துரை செய்துள்ளார்.








