சேலம் மத்திய சிறையில் இரண்டு கைதிகளை விஷம் வைத்துக் கொலை செய்ய முயற்சி நடப்பதாக சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பியவர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மத்திய சிறையில் திருச்சியை சேர்ந்த கொலை வழக்கு கைதி மணி, மதுரையை சேர்ந்த ரவுடி அப்பள ராஜா ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மணி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே சென்றார். இந்த நிலையில் அவரது வழக்கறிஞர் பொன் முருகேசன் என்பவர் சமூக வலைதளங்களில் சில தகவல்களை பரப்பி உள்ளார். அதில் மணி மற்றும் அப்பள ராஜா ஆகிய இரண்டு கைதிகளையும் கொலை செய்வதற்கு சென்னை மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் தூண்டுதலின் பேரில் ஸ்லோ பாய்சன் கொடுத்துள்ளதாகவும் அதில் மணி பிணையில் விடுதலையாகி தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ரவுடி அப்பள ராஜா சேலம் மத்திய சிறையில் ஆபத்தான நிலையில் இருந்து வருவதாகவும் கூறியுள்ள வழக்கறிஞர் பொன் முருகேசன், உயர் அதிகாரிகள் தலையிட்டு சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தார். சிறைக்காவலர் மதிவாணன் சேலம் சைபர் க்ரைம் காவல்துறையில் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய வழக்கறிஞர் பொன் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








