போதை மறுவாழ்வு மையத்தில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னையில் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருபவர் லோகேஸ்வரி. இவரது கணவர் கார்த்திகேயன். இந்த போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்கனவே ராஜ் என்ற தொழிலாளி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது, அங்கு நடைபெற்ற சித்திரவதைகள் குறித்து வெளியில் சென்று தகவல் சொன்னதால் ராஜை திட்டமிட்டு அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ராஜின் மனைவி கலா, தனது கணவரை அடித்துக் கொன்றுவிட்டதாக சென்னை அண்ணாசாலை போலீஸில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், போதை மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற சித்திரவதைகள் குறித்து வெளியில் சென்று தகவல் சொன்னதால் ராஜை அடித்துக் கொலை செய்யும்படி லோகேஸ்வரி மற்றும் கார்த்திகேயன் வீடியோ கால் மூலம் கூறியது தெரியவந்துள்ளது. மேலும், ஏற்கெனவே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்களை பணியில் அமர்த்தி மற்றவருக்கு சிகிச்சை அளித்ததும், அவர்களை வைத்து ராஜை அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
போதை மறுவாழ்வு மையத்தை நடத்திய கார்த்திகேயன் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதும், முன்னாள் மாநகராட்சி ஊழியர் என்பதும், போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சை பெற வந்தவர்களிடம் 20 ஆயிரம் கட்டணம் வசூல் செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதை மறுவாழ்வு மையத்தை அனுமதி இல்லாமல் நடத்தி வந்த லோகேஸ்வரி மற்றும் அவருடைய கணவர் கார்த்திகேயன் இருவரையும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 12 பேரும் காயங்களுடன் அரசு காப்பகத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








