ஆண் ஒருவரை கொலை செய்து உடலை போர்வையினால் சுற்றி சாக்கடையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.
ஈரோடு மோளகவுண்டன்பாளையம் ஜீவானந்தம் வீதி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு இப்பகுதியில் உள்ள கழிவு நீர் சாக்கடையில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் சாக்கடையை எட்டி பார்த்தபோது, போர்வையினால் சுற்றப்பட்டு, இறந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை பார்த்ததும், எங்கோ கொலை செய்து உடலை போர்வையினால் சுற்றி வீசி சென்றதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.
மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் ,ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் விசாரணை நடத்தினர். இதில், சாக்கடையில் இறந்து கிடந்தது 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்பதும், தலையில் பலமாக தாக்கி கொலை செய்து சாக்கடையில் வீசி சென்றதும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.







