காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்திய பேட்மிண்டன் அணி, மகளிர் குழுவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அறிவிக்கப்படாதது பலரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ரன் மெஷினுக்கு மின்சாரம் பாய்ச்சும் பாகிஸ்தானின் பவர் பிளே கிங்:
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் பாபர் ஹசாம் முதலிடம் வகித்து வரும் சூழலில், நேற்று இந்தியா, இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியில் விராத் கோலி வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். விராத் கோலி கடந்த மூன்று ஆண்டுகளாகச் சிறப்பாக விளையாட இயலாத சூழலில், தரவரிசை பட்டியலில் முதல் இடத்திலிருந்து 3 இடத்திற்குச் சரிவைச் சந்தித்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் ஹசாம் விராத் கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் “இதுவும் கடந்து போகும், உறுதியாக இருங்கள்” எனத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்கதையாகும் சாய்னா நேவாலின் சரிவு:
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனை அயா ஓஹாரி உடன் மோதி தோல்வியுற்றார். அயா ஓஹாரியிடம் 13-21, 21-15, 20-22 என்ற புள்ளி கணக்கில் 2-1 செட் கணக்கில் வீழ்ந்தார் சாய்னா நேவால்.
சிங்கப்பூர் ஓபன் – அரையிறுதியில் பிவி.சிந்து:
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பிவி.சிந்து. சீன வீராங்கனை யூ ஹன் – ஐ 17-21, 21-11, 21-19 என 2-1 என்ற நேர் செட்களிள் வீழ்த்தி பிவி.சிந்து வெற்றி பெற்றார். இந்நிலையில் சிங்கப்பூர் ஓபன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பிவிசிந்து.
சிங்கப்பூர் ஓபன் – வெளியேறினார் HS பிரணாய்:
இந்திய பேட்மிண்டன் வீரரான HS பிரணாய் சிங்கப்பூர் ஓபன் காலிறுதி சுற்றில் ஜப்பான் வீரர் கொடை நரோகா உடன் மோதி 21-12, 14-21, 18-21 என்ற புள்ளி கணக்கில் வீழ்ந்தார். இந்நிலையில் HS பிரணாய் காலிறுதி சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் – இந்தியாவின் 4 நட்சத்திரங்கள்:
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று முதல் அமெரிக்காவின் ஒரேகன் மாநிலத்தில் துவங்கப்பட உள்ளது. இன்று துவங்கி வரும் ஜூலை 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ள தடகள போட்டிகளில், இந்தியா சார்பில் 22 பேர் பங்கேற்க உள்ளனர். அதில் குறிப்பாகப் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்கள் 4 பேர் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, நீளம் தாண்டுதலில் தேசிய சாதனை புரிந்துள்ள முரளி ஶ்ரீஷங்கர், 3000 மீட்டர் தடையோட்ட வீரர் அவினாஷ் சப்லே, ட்ரிபிள் ஜம்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் உள்ளிட்டோர் கவனிக்கத்தக்க நட்சத்திரங்களாக உள்ளனர்.
உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்றது டோக்கியோ:
உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளை ஜப்பானின் டோக்கியோவில் நடத்துவதாக உலக தடகள சம்மேளனம் திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் அமெரிக்காவின் ஒரேகன் மாநிலத்தில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டு அத்தியாயத்தினை நடத்தும் நாடுகள் குறித்த முடிவில், ஜப்பானின் டோக்கியோ தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் டோக்கியோவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளியானது 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் டீஸர்:
44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜூலை 28 ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவில் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான டீஸர் நேற்று தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் செஸ் ஒலிம்பியாட் டீஸரை அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஒடிசாவை அடைந்தது ஒலிம்பியாட் ஜோதி:
வரும் 28-ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் துவங்கப்பட உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக, வரலாற்றிலேயே முதல் முறையாக ஒலிம்பியாட் ஜோதி அறிமுகம் செய்யப்பட்டு, இந்தியாவின் 75 முக்கிய நகரங்களுக்குப் பயணிக்கும் வகையில், கடந்த 19 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் டெல்லியிலிருந்து ஜோதி ஓட்டம் துவங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சென்றடைந்தது ஒலிம்பியாட் ஜோதி. வரும் 27 ஆம் தேதி சென்னையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்திய பேட்மிண்டன் அணி அறிவிப்பு:
இங்கிலாந்தின் பிரிமிங்கமில் வரும் ஜூலை 28-ஆம் தேதி துவங்கப்பட உள்ள காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க இந்தியா சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் குழுவினர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆடவர் குழுவில் லக்ஷை சென், ஶ்ரீகாந்த் கிடம்பி, சாத்விக்சாய்ராஜ், சீரக் ஷெட்டி, சுமித் ரெட்டி உள்ளிட்டோரும், மகளிர் குழுவில் PV சிந்து, ஆகர்ஷி காஷ்யப், காயத்ரி கோபிசந்த், டிரஸா ஜாலி, அஸ்வினி பொண்ணப்பா உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மகளிர் குழுவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அறிவிக்கப்படாதது பலரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








