மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும்-அமைச்சர் துரை முருகன்

தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு விவசாய பணிகளுக்கு முன்னரே திறந்து விட உத்தேசிக்கப்பட்டு, அனைத்து கால்வாய்களிலும் 16.07.2022 அன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார். இதுதொடர்பாக…

தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு விவசாய பணிகளுக்கு முன்னரே திறந்து விட உத்தேசிக்கப்பட்டு, அனைத்து கால்வாய்களிலும் 16.07.2022 அன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் காவிரியில் தற்பொழுது சுமார் 1.08 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. இன்று மதியம் 12.00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114.81 அடி, கொள்ளளவு 85.434 டி.எம்.சி. நீர்வரத்து 1.08 லட்சம் கன அடியாக உள்ளது.

இந்நிலையில் தண்ணீர் வரத்து இருந்தால், 16.07.2022 இரவு மேட்டூர் அணை 120 அடியை எட்டும் என எதிர்நோக்கப்படுகிறது. தற்சமயம் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து 25,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 5.20 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் கால்வாய் மூலம் 45,000 ஏக்கர், புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்கள் மூலம் 42,000 ஏக்கர் பாசன பரப்புகள் பயன்பெறும். இந்த வாய்க்கால்களின் மூலம் 129 கண்மாய்களுக்கு தண்ணீர் நிரப்ப இயலும், இதன் மூலம் 2000 கன அடி தண்ணீர் எடுத்து பயன்படுத்தலாம்.

மேலும், கல்லணையிலிருந்து பிரியும் கல்லணைக் கால்வாய் மூலம் 694 கண்மாய்களுக்கு 1000 கன அடி தண்ணீர் எடுத்து வழங்கவும், கொள்ளிடத்தின் மூலம் கடலுார் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலுள்ள 1.32 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறவும் மற்றும் வீராணம் ஏரியை நிரப்பவும் 2000 கன அடி தண்ணீர் தேவைப்படுகிறது.

ஆக மொத்தம் 5000 கன அடி தண்ணீர் கூடுதலாக எடுத்து பயன்படுத்தலாம். மேலே குறிப்பிட்ட வாய்க்கால்களுக்கு ஆகஸ்டு 1-ஆம் தேதி தண்ணீர் திறந்து விட பாசன விதி தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு விவசாய பணிகளுக்கு முன்னரே திறந்து விட உத்தேசிக்கப்பட்டு, அனைத்து கால்வாய்களிலும் 16.07.2022 அன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அந்த அறிக்கையில் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் 137 நாட்களுக்கு கிழக்கு மேற்கு கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என நீர்வள துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதனிடையே, மேட்டூர் அணை அடுத்த சில நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திருச்சி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.