மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகு சிறையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகு சிறையில், அனுசியா வெள்ளையப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. மொத்தம் இரண்டு கட்டிடங்களில் பணியாற்றி வந்த புளியகவுண்டன்பட்டி மற்றும் வடக்கம்பட்டியைச் சேர்ந்த ஐந்து பேர் இந்த வெடிவிபத்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனிவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள அழகு சிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். செய்தி அறிந்தவுடன், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளேன்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த தெரிவித்துக்கொள்வதோடு தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







