மதுரை ஆவினில் 2020-21ம் ஆண்டில் பணி நியமன முறைகேடு புகாரையடுத்து பணி நியமனம் பெற்ற 47 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை ஆவினில் கடந்த 2020 மற்றும் 2021ல் மேலாளர், எக்ஸிகியூடிவ் உட்பட 61 பணி இடங்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் நியமனம் செய்யப்பட்டனர். இதில் தகுதியற்றவர்க்குக்கு பணி வழங்கியது, எழுத்து தேர்வு வினாத்தாள்கள் வெளியானது காசோலை மோசடி, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 பேருக்கு நியமனம் வழங்கியது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை குழு இரு முறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த நிலையில் ஆவின் துணைப் பதிவாளர் கணேசன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு ஆவணங்கள் கிடைக்கப் பெற்றது. பின்னர் ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் 2020-21ம் ஆண்டு ஆவினில் பணி நியமனம் ஆணை பெற்றவர்களிடம் பணிநியமன உத்தரவு, கல்வித் தகுதி உள்ளிட்ட அனைத்து வகை அசல் சான்றிதழ்கள், ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் பெற்று விசாரணை நடத்தினர். இதில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை ஆவின் பால்வளத்துறை ஆணையருக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து அந்தாண்டுகளில் நியமிக்கப்பட்ட மேலாளர் (தீவனம்), மேலாளர் (எம்.ஐ.எஸ்.,) மேலாளர் (பொறியியல்), முதுநிலை பணியாளர்கள், ஜூனியர் அசிஸ்டென்ட், துணை மேலாளர்கள் என 47 பேரின் நியமனங்களை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப் பிரிவு 81ன் கீழ் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்போதைய ஆவின் மேலாளர் (நிர்வாகம்) காயத்ரி மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவினின் திடீர் நடவடிக்கையால் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை ஆவினில் விரைவில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் திடீர் பணி நீக்க உத்தரவால் ஆவினில் பணியாளர்கள் தட்டுப்பாட்டால் பணிகள் முடங்க வாய்ப்புள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களில் பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளாகி பணி உறுதி செய்யப்படவுள்ள நிலையில் ஆவின் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் தகுதியின அடிப்படையில் தேர்வானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.







