2017-ல் இதே நாளில் திமுகவின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஆண்டில் திமுகவின் தலைவராகி, 2021-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் மு.க.ஸ்டாலின். இக்காலகட்டத்திலான அவரது அரசியல் பயணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
எந்தவித பின்புலமும் இன்றி, சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறையும், திமுக தலைவராக சுமார் 50 ஆண்டுகள் இருந்து கோலோச்சியவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. அவரது மகனான மு.க.ஸ்டாலினின் அரசியல் நுழைவு எளிதாக தான் இருந்தது. ஆனால், அடுத்தகட்ட அரசியல் பயணத்தில் சவால்களையும், சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியது ஆயிற்று. கட்சியிலும், ஆட்சியிலும் தலைமைப் பதவியைப் பிடிக்க சற்றேறக்குறைய பொன்விழா ஆண்டுகள் வரை காத்திருந்தார் ஸ்டாலின்.
பிரதமராக இருந்த இந்திராகாந்தி, 1976-ல் கொண்டு வந்த எமர்ஜென்சி சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட போது கடுமையாக தாக்கப்பட்ட போது ஸ்டாலினின் அரசியல் ஆரவம் முன்பை விட பல மடங்கு அதிகமானது.
1980-களில் இளைஞரணியை திமுக தலைமை அங்கீகரித்தபோது, திமுக இளைஞரணியின் அமைப்பாளராகவும் அடுத்ததாக இளைஞரணியின் செயலாளராகவும் பொறுப்பேற்றார் ஸ்டாலின். 35 ஆண்டுகளுக்கு மேலாக அப்பதவியில் இருந்து இளைஞரணியை, திமுக எனும் கோட்டையை காக்கும் தளகர்த்தகர்கள் நிறைந்த காவல் அரணாக மாற்றினார். திமுகவின் சோதனையான கால கட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியில் புதிதாக இணைபவர்களை அரவணைத்து உற்சாக மூட்டினார்.
1989-ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்வானார் மு.க.ஸ்டாலின். 2 ஆண்டுகளில் மு.கருணாநிதி தலைமையிலான ஆட்சி கலைப்பு, 1991 பொதுத்தேர்தலில் திமுக படுதோல்வி, திமுகவில் முக்கிய தலைவராக இருந்த வை.கோ வெளியேற்றம் போன்ற நிகழ்வுகளுக்கு பின், திமுக என்ற இயக்கத்தை கட்டி காத்ததில் இளைஞரணிக்கும், ஸ்டாலினுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை அரசியல் நிபுணர்கள் பதிவு செய்கின்றனர்.
2008-ம் ஆண்டு திமுகவின் பொருளாளராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். 2009 மக்களவை தேர்தலின்போது, முதலமைச்சராகவும், திமுக தலைவராகவும் இருந்த மு.கருணாநிதிக்கு உடல்நலம் சரியில்லை. அப்போது திமுக கூட்டணிக்காக தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்தார் மு.க.ஸ்டாலின். திமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றது. மக்களவை தேர்தல் வெற்றிக்கு பரிசாக மு.க.ஸ்டாலினை, துணை முதலமைச்சராக்கினார் கருணாநிதி.
அடுத்து வந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும், 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல்களிலும் திமுக படுதோல்வியடைந்தது. அப்போது மீண்டும் மக்களை சந்தித்து, என்ன தவறு செய்தோம், திருத்தி கொள்கிறோம். திமுகவுக்கு வாய்ப்பளியுங்கள் என்றார். 2015-ம் ஆண்டில் ”மக்களை தேடி, நமக்கு நாமே”‘ போன்ற வாசகங்களுடன் மக்களை சந்திக்க மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் எம்ஜிஆரைப்போல், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானார். ஆனாலும், திமுக 98 எம்.எல்.ஏக்களை வென்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அந்த பெருமைக்கு உரியவர் ஆனார் அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவில் நடந்த உட்கட்சி பூசல்களை, திமுகவுக்கு சாதகமாக்கி கொள்ளாமல் நாகரிகமான அரசியல் பாதையிலே பயணித்தார் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலை குன்றியபோது, 2017-ல் திமுகவின் உட்கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. திமுக வரலாற்றில் புதிதாக செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, தலைவருக்கு இணையான அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூடுதலாக, செயல் தலைவராகவும் பொறுப்பேற்றார். 2018-ல் திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையடுத்து மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை இருவரும், வெவ்வேறு கால கட்டங்களில்,10 ஆண்டுகள் திமுகவின் பொருளாளராக இருந்து தலைவராக தேர்வானவர்கள்.
2019 மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில், திமுக கூட்டணி 39 எம்.பிக்களை பெற்றது. இதன்மூலம் மீண்டும் தன் ஆளுமைத்திறனை வெளிப்படுத்தினார் மு.க.ஸ்டாலின். அடுத்து வந்த சட்டமன்ற இடைத்தேர்தல்கள், ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் , கணிசமான வெற்றியை திமுக பெற்றது.
2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக 139 எம்.எல்.ஏக்களை வென்றது. எதிர்க்கட்சியாக இருந்து தேர்தலில் வென்று, முதலமைச்சரான வரலாற்றில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் மு.க.ஸ்டாலினும் இடம்பிடித்தார். அத்துடன் 2006 தேர்தலைப்போல் இல்லாமல், 2021 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி பலரின் விமர்சனங்களை, “ஓய்வறியாத அயராத உழைப்பு” மூலம் வென்று, செயல்வீரராக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பதிவு செய்தார்.
தற்போது, சமூகநீதி, மாநில உரிமை, இந்தி திணிப்பு, மாநில சுயாட்சி, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் நல திட்டங்கள் என அனைத்திலும், செயல்பாடுகளால் அனைவரையும் உற்று நோக்க வைத்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்







