தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தலுக்கு முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்படுமா? எனவும் தேர்தலுக்கு பின் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் ஜாமர் கருவிகள் பொருத்தப்படுமா? எனவும், திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது? எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.இந்த கேள்விகளுக்கு வரும் 29 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இது தவிர, பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறிவது தொடர்பாக, அரசியல் கட்சிகளின் கூட்டத்தை இந்த வாரமே கூட்ட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள்
அவ்வாறு, பதட்டமானவை என கண்டறியப்படும் வாக்கு சாவடிகளில் வெளிமாநில காவல்துறையினரையும், துணை ராணுவ படையினரையும் பணியில் அமர்த்த வேண்டும் என உத்தரவிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என வேட்பாளர்கள் கேட்டுக் கொண்டால், தேர்தல் ஆணையம் அனுமதிக்கலாம் என கூறிய நீதிபதிகள் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என உத்தரவாக பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.







