மகளுடன் காதல்; இளைஞரை கொலை செய்ய முயன்ற தந்தை கைது

தனது மகளுடன் ஊர் சுற்றிய காதலனை நண்பர்களுடன் இணைந்து ஆணவக்கொலை செய்ய முயன்ற தந்தை உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர், அப்பகுதியில் உள்ள தனியார்…

தனது மகளுடன் ஊர் சுற்றிய காதலனை நண்பர்களுடன் இணைந்து ஆணவக்கொலை செய்ய முயன்ற தந்தை உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர், அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவருக்கும், கோவையிலுள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்துள்ளனர்.

இதனிடையே கடந்த ஜூலை மாதம் மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு காதலனுடன் வெளியே சென்ற நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் மாணவி பள்ளிக்கு வராதது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இரு தரப்பினரையும் விசாரித்து, மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து மாணவியை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்துள்ளனர். இதனிடையே தனது மகளை காதலித்து வெளியே அழைத்துச்சென்ற இளைஞர்  மீது மாணவியின் தந்தைக்கு ஆத்திரம் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். நேற்று மாணவியின் தந்தை மற்றும் அவரது நண்பர் இளைஞரை தொடர்புகொண்டு ஆர்.எஸ் புரத்தில் உள்ள தியேட்டர் அருகே வருமாறு அழைத்துள்ளனர்.

இந்நிலையில் இளைஞர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, மாணவியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் இருவர் என மூவரும் இணைந்து தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் மாணவியின் தந்தை, இளைஞர்  சாதி பெயரை கூறி தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால்  குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.

கழுத்து மற்றும் கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதால் அந்த இளைஞர்  வலியால் துடித்து தப்பிக்க முயன்றுள்ளார். வாலிபரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்ட நிலையில் மூவரும் தப்பி ஓடினார். படுகாயமடைந்த இளைஞர் மீட்ட அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் கொலை முயற்சி மற்றும் சாதிய வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தை மற்றும் அவரது நண்பர் இருவர் என மூவரையும் கைது செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.