ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் மேல்நிலை வகுப்பு படிப்புகளுக்கான தேர்வை 22 மொழிகளிலும் நடத்த வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில், மேல்நிலை வகுப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்காக தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு மொழிகளின் பிறப்பிடமான இந்தியாவில், இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் ஒன்றிய அரசு இந்த பாரபட்சமான முறையை கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் பட்டியிலிடப்பட்ட 22 மொழிகளிலும் தேர்வு நடத்தி ஒன்றிய அரசு சமூக நீதியை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கனிமொழி எம்பி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்





