மக்களவைத் தேர்தல் 2024 – திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை…

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.  இந்த நிலையில்  கூட்டணி, தொகுதி பங்கீட்டை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் நிறைவு செய்துள்ளன.

அந்த வகையில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), கோவை,  தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தை திமுக ஒதுக்கியுள்ளது.

இதேபோல் சிபிஐக்கு 2 தொகுதிகளும், சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு ஒரு தொகுதியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேக நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கியுள்ளது. மதிமுக கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தவர்களின் பட்டியலை காணலாம்.

ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு மனு தாக்கல்

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்; அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனிருந்தார்

Image

திருப்பூர் தொகுதி சிபிஐ வேட்பாளர் – சுப்பராயன்

திமுக கூட்டணி சார்பில் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன்,  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Image

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் – கதிர் ஆனந்த்

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  அப்போது அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார்.

Image

கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் – கோபிநாத்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோபிநாத் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரயு இடம் வேட்புமனுவை வழங்கினார்.

Image

விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் – ரவிக்குமார்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் பழனியிடம் மனு தாக்கல் செய்தார்.  முன்னதாக கலைஞர் அறிவாலயத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அமைச்சர் பொன்முடி தலைமையில் பேரணியாக வருகை தந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Image

விருதுநகர் தொகுதி காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தனது வேட்புமனு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தார் .

Image

திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ 

திமுக கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ தனது வேட்புமனுவை திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்

Image

தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் – ஆ.மணி

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணி தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை  தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனிருந்தார்

தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் – தமிழச்சி தங்கபாண்டியன்

தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் – மாதேஸ்வரன்

திமுக கூட்டணி சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் மதிவேந்தன், எம்.பி. கே.ஆர்.என். ராஜேஷ்குமார், நாமக்கல் திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில், கொமதேக தேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

ராமநாதபுரத்தில் நவாஸ்கனி மனு தாக்கல்

ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.  அப்போது அமைச்சர் ராஜ கண்ணப்பன்,  சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பொள்ளாச்சியில் கே.ஈஸ்வரசாமி வேட்புமனு தாக்கல்

பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது திமுக திருப்பூர் மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன்,  கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் ரவி,  மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் வேட்புமனு

சிவகங்கையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார்.  அப்போது அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், மெய்யநாதன் மற்றும் முன்னாள் அமைச்சர் தமிழரசி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Image

மதுரையில் சு.வெங்கடேசன் வேட்புமனு

மதுரையில் திமுக கூட்டணயில் சி.பி.எம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சு.வெங்கடேன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி.கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

திருவண்ணாமலையில் சி.என்.அண்ணாதுரை வேட்புமனு தாக்கல்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வடசென்னையில் கலாநிதி வீராசாமி வேட்புமனு தாக்கல்

வடசென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உடன் இருந்தனர்.

Image

திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் வேட்புமனு தாக்கல்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் வேட்புமனு தாக்கல் செய்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஈரோட்டில் பிரகாஷ் வேட்புமனு தாக்கல்

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சேலத்தில் செல்வகணபதி வேட்புமனு தாக்கல்

சேலம் மக்களவைத் தொகுதியில் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது கூட்டணிக்கட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

ராமநாதபுரத்தில் நவாஸ் கனி வேட்புமனு தாக்கல்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் கே.நவாஸ் கனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.