நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் கிராப்போர்டு லிட்டில் பிளவர் பள்ளியில் உள்ள 58-வது வார்டு வாக்குச் சாவடியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார். இதையடுத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மக்கள் அனைவரும் காலையிலே வாக்களிக்க ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார். திமுகவைப் பொருத்தவரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில், இந்தத் தேர்தலை வாக்களிக்கும் நாளாக பார்க்கவில்லை எனவும், மக்கள் தங்கள் மனுக்களை அளிக்கும் நாளாகவே பார்ப்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சாலிகிராமம் காவேரி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். இதையடுத்து பேசிய அவர், தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராகவும் உள்ள தான் தமிழ்நாட்டில் தனது வாக்கைச் செலுத்துவதில் பெருமை அடைவதாக தெரிவித்தார். மற்ற தேர்தலைப் போலவே உள்ளாட்சித் தேர்தலும் மிக முக்கியமானது எனத் தெரிவித்த அவர் மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து வாக்களிக்க வேண்டும் எனவும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாக்களித்தார். இதையடுத்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாக்குப்பதிவு வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையாகவும் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் முடிவுக்குப் பின்னர் அதிமுக-வினர் தங்கள் தோல்விக்கு காரணத்தைச் சொல்வதற்கு இப்பொழுதே காரணம் தேடிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், கோவையில் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற்றாலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் சண்முகாபுரம் பகுதியிலுள்ள 36-வது வாக்குசாவடி மையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எம்.பி பொன் கெளதமசிகாமணி குடும்பத்துடன் வாக்குப் பதிவு செய்தார்.. இதையடுத்து பேசிய அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் பகுதியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சி தொடர மக்கள் வாக்களிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 1-வது வார்டு மையத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கே.டி. ராஜேந்திர பாலாஜி சிவகாசி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும் எனத் தெரிவித்தார்.48 வார்டுகளில் 33 வார்டுகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெறும் எனவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.








