மாணவி பிரியா மரணத்தில் இந்த அரசு உண்மையை உரக்கச்சொல்வோம் என்றும் ஓரிரு நாட்களில் அறிக்கை கிடைக்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் முத்துமாரியம்மன் கோயில் அருகில் நீர் வழி தடங்கள் அருகாமையில் வசிப்பவர்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டு கொசுவலைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவி பிரியா உயிரிழந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கூறினார். மருத்துவ குழுவின் அறிக்கையை வைத்து தான் மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது என தெரிவித்தார்.
மாணவி பிரியா விவகாரத்தில் அரசியலுக்காக பேசப்படும் வார்த்தைகளுக்கு தான் பதில் கூற விரும்பவில்லை என்றார். குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து உயிர் விபத்து ஏற்பட்டபோது, காண்ட்ராக்டர் இது கடவுள் விதி என்று கூறினார். அதுபோல் நாங்கள் கூற மாட்டோம். மருத்துவர்களின் கவன குறைவு என்பதை நேரடியாக ஒத்துக் கொண்டுள்ளோம் என கூறினார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
பாஜகவை போல் நாங்கள் தப்பித்து செல்ல மாட்டோம். உண்மையை உரக்கச்சொல்லி என்ன நடந்தது என்பதை ஊருக்கு தெரிய வைப்போம். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஓரிரு நாட்களில் விசாரணை அறிக்கை கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இனி தமிழ்நாட்டில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க மருத்துவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேசியுள்ளார். அதில் மருத்துவர்கள் இருக்கும் துறை குறை இல்லாத துறையாக இருக்க வேண்டும். ஒரு சில குறைகள் இருந்தாலும் அதையும் இல்லாத அளவுக்கு சரிகட்டப்படும் என முதலமைச்சரும், தானும் மாநாட்டில் மருத்துவர்களுக்கு தெரிவித்துள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.








