”தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம்” – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!

வாக்குத் திருட்டு போன்ற முயற்சிகளை முறியடித்து தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து  கொண்ட முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், “தமிழகம் கோரிய ரூ. 37,000 கோடி நிதியை மத்திய பாஜக அரசு கொடுக்கவில்லை. தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துவிடும் என்பதால் தான் அந்த நிதியை கொடுக்க மறுக்கிறது. ஒன்றிய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் திமுக அரசு மக்களைக் காக்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

இப்போது தேர்தல் ஆணையம் மூலமாக ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்’ மூலமாக நமது வாக்குரிமையைப் பறிக்கும் சதியை அறிவித்திருக்கிறார்கள்.

பிகாரில் என்ன நடந்தது என்று பார்த்தோம். பாஜகவுக்கு தோல்வி உறுதியானதால் வாக்காளர்களையே நீக்க துணிந்தார்கள். அதே ஃபார்முலாவவை தமிழ்நாட்டிலும் முயன்று பார்க்கிறார்கள். தொடக்கம் முதலே இதனை நாம் எதிர்த்து வருகிறோம்.

இதுதொடர்பாக நவ. 2 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கவிருக்கிறது. ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்குரிமையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். வாக்குத் திருட்டு போன்ற பாஜகவின் முயற்சிகளை முறியடிப்போம். தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம். அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு இதில் பங்கேற்க வேண்டும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.