“80-வது சுதந்திர தினத்தில் மதநல்லிணக்கத்தை காத்திட சூளுரையேற்போம்” – மாணிக்கம் தாகூர் வாழ்த்து!

80-வது சுதந்திர தின விழாவில் மதவெறி சக்திகளை மாய்த்திடவும், மதநல்லிணக்கத்தை கட்டிக் காத்திடவும் சூளுரையேற்போம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

நாளை இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, “இந்தியா விடுதலைப் பெற்று 80-வது சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், அதற்கு அடித்தளம் அமைத்தவர்கள் மகாத்மா காந்தி, பண்டித நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்ற ஒப்பற்ற தலைவர்களை நினைவு கூர வேண்டியது நமது கடமையாகும். இந்தியாவில் சமீபகாலமாக மதவெறியை தூண்டி விடும் பா.ஜ.க. ஆட்சி செய்து வந்தாலும், நாட்டு மக்களின் உரிமைகளை அரசமைப்புச் சட்டம் தான் பாதுகாத்து வருகிறது. இந்தியாவின் ஒற்றுமையையும், இறையாண்மையையும், மாநில உரிமைகளையும் அரசமைப்புச் சட்டத்தின் மூலமாகவும், நீதிமன்றங்களின் வாயிலாகவும் காப்பாற்றி வருகிறோம்.

இந்நிலையில் 80 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடுகிற இந்நேரத்தில் மதவெறி சக்திகளை மாய்த்திடவும், மாநில உரிமைகள் பறிப்பதை முறியடிக்கவும், தேர்தல் ஆணையம் மக்களின் வாக்குகளை திருடுகிற நடவடிக்கையின் மூலம் பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்கு துணை போவதை தடுத்து நிறுத்திடவும், மதநல்லிணக்கத்தை கட்டிக் காத்திடவும் சுதந்திர திருநாளில் சூளுரையேற்போம். இந்தியாவில் வகுப்புவாத சக்திகள் தலை தூக்காமல் முறியடிக்கிற பணியை மிகச் சிறப்பாக செய்கிற வகையில் பரப்புரை மேற்கொண்டு இந்திய இறையாண்மையை பாதுகாப்போம்.

தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எமது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.