“தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!

நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம் என உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

“Let us make the glory of the Tamil language known to the world” - BJP state president Annamalai!

தாய்மொழிகளின் அவசியத்தையும் அதன் சிறப்புகளையும் மக்களுக்கு எடுத்துரைக்க ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக கொண்டாட, யுனெஸ்கோ அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுமாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, 2000ம் ஆண்டு முதல் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் விதமாக, சர்வதேச தாய்மொழி தினம், 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.

உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. இதன்படியே, பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது. நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்”

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.