உணவு தேடி ஊருக்குள் வந்த ஒற்றை யானை – சிசிடிவி காட்சிகள் வைரல்!

கோவை சுற்றுவட்டார கிராமப் பகுதியில் கடந்த சில மாதங்களாக உணவு தேடி ஊருக்குள் காட்டு யானைகள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது….

கோவை மாவட்ட சுற்றுவட்டாபகுதியில் கடந்த சில மாதங்களாக வேட்டையன் என்ற ஒற்றை யானை சுற்றி வருகிறது. இந்த யானை இரு தினங்களுக்கு முன்பு இரவு தோட்டத்து கேட்டை மூடச் சென்ற விவசாயி வேலுமணி என்பவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து முத்து மற்றும் சுயம்பு என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. அவை கோவை வரப்பாளையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தன. இதனிடையே, எதிர்பாராத விதமாக 2 கும்கி யானைகளுக்கும் மதம் பிடித்ததால் அதனை மீண்டும் டாப்ஸ்லிப்பில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று (பிப். 20) இரவு வரப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி என்பவர் தோட்டத்திற்குள் புகுந்த வேட்டையன் யானை, அப்போது அங்கு இருந்த வீட்டின் கதவு முன்பு நின்று எட்டிப் பார்த்தது. இந்த நிகழ்வு அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வனத் துறையினர் வேட்டையனை பிடித்து வேறு ஒரு அடர்ந்த வனப் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள்  கோரிக்கையை வைத்து வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.