கொரோனா காலத்தில் பல்வேறு படிப்பினைகள் கிடைத்துள்ளதாக குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக வந்த குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பாரதியார் வாழ்ந்த இல்லத்திற்கு சென்றார். அங்கு பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த பாரதியாரின் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.
இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மின்சாரம் தயாரிக்கும் சூரிய சக்தி நிலையம் தொடக்க விழா நிகழ்ச்சியில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கொரோனா காலத்தில் பல்வேறு படிப்பினைகள் கிடைத்துள்ளதாகக் கூறினார். இயற்கையாக காற்று வந்து செல்லும் வகையிலும், சூரிய ஒளி உள்ளே வருவது போலவும் புதிய கட்டடங்களை அமைக்க வேண்டும் என்பது கொரோனா மூலம் கிடைத்த படிப்பினை எனத் தெரிவித்த அவர், காற்றுக்கும், சூரிய ஒளிக்கும் இயற்கையாகவே நோய்களை குணப்படுத்தும் தன்மையுள்ளது என குறிப்பிட்டார்.







