வரும் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெறும் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, தமிழ்தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்கு தமிழ்நாடு முழுவதும் திருஉருவச் சிலைகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதலளித்து பேசிய அமைச்சர் சாமிநாதன், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த்தாத்தாவுக்கு சிலை வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : செப்டம்பர் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம்! – முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைவர்கள் சிலைகளிலும், நினைவில்லங்களிலும் QR கோடு பொருத்தி, அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் எனக்கூறிய அவர், முதலாவதாக திருவள்ளுவர் சிலையிலும், அதற்கு பிறகு அனைத்து சிலைகளிலும் QR கோடு பொருத்தும் பணி ஒருவாரத்தில் தொடங்கப்படும் என குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தன்னுடைய பதின்மூன்றாவது வயதில் போர் பாடலை பாடி, 86 வயதில் தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார். தொடர்ந்து, வரும் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெறும் என அவர் அறிவித்தார்.







