இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர்.
இலங்கையில் கடந்த ஒரு வருடமாக தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்யாவாசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் முக்கியப் பொருட்களான உணவுப் பொருள் மற்றும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தங்களால் இனி சமாளிக்க முடியாது என்று இலங்கை மன்னார் மாவட்டம் தாவுகாடு பகுதியை சேர்ந்த சாந்தக்குமார்(33) ரூபலெட்சுமி(26)மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையென ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தங்களிடம் இருந்த நகை மற்றும் நிலத்தை விற்பனை செய்து படகில் புறப்பட்டு நேற்று அதிகாலை 3.30மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனைப்
பகுதிக்கு வந்து இறங்கினர்.
தகவல் அறிந்த ராமேஸ்வரம் போலீசார் அவர்களை மீட்டு குடிநீர், குழந்தைகளுக்கு பால் உள்ளிட்டவைகளை கொடுத்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
தனுஷ்கோடிக்கு வந்து இறங்கிய இலங்கை தமிழர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறையினர் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு 5 பேரும் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மண்டபம் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள இலங்கைதமிழர் மறுவாழ்வு மையத்தில் உணவுப் பொருள்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
—சே. அறிவுச்செல்வன்







