டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ‘கடைசி விவசாயி’ இயக்குனர் மணிகண்டன், பீ.லெனின், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருக்கு தேசிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
2021-ஆம் ஆண்டு சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு தெசிய விருதுகள் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில், நாட்டின் 69-வது தேசிய விருதுகள் பட்டியலில் மொழிவாரித் தேர்வில் தமிழின் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்வாகியிருந்தது. அதற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து படத்தின் இயக்குநர் மணிகண்டன் தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார்.
இப்படத்தில் விவசாயியாக நடித்த நல்லாண்டிக்கும் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டிருந்தது. நல்லாண்டி மறைந்ததால், அவர் குடும்பத்தினர் சார்பில் விருதை மணிகண்டன் பெற்றுக்கொண்டார். சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா’ பாடலுக்காக ஷ்ரேயா கோஷலுக்கு வழங்கப்பட்டது.
சிறப்பு பிரிவில் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு தயாரித்து இயக்கிய கருவறை என்ற Non-feature film-ல் இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது.
இதே போன்று சிறந்த கல்விக்கான திரைப்படம் என்கிற பிரிவில் தேர்வான சிற்பிகளின் சிற்பங்கள் திரைப்படத்திற்காக அத்திரைப்படத்தின் இயக்குனரான பிரபல எடிட்டர் பீ.லெனின் தேசிய விருது பெற்றார்.









