இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்..
இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் தொடர் கனமழையால் இதுவரை 55 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்லா மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த வீடுகள் இடிந்து விழுந்தன.
சிம்லா மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக மலைப் பகுதியில் இருந்த அடுக்குமாடி வீடுகள் இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கட்டடம், அருகில் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் உள்ளிட்டவை நொறுங்கி விழுந்தன.
வீடுகள் இடிந்து விழும்போது மக்களின் அலறல் சத்தம் கேட்டது பெரும் பரிதாபகரமாக காட்சி அளித்தது. இடிபாடுகள் நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் சம்பவ இடத்தை ஆய்வு செய்த இமாச்சல் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். வீடுகள் இடிந்து விழுவதற்கு முன்பே, பலர் மீட்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.







