லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கின் சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதியன்று, மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து விவசாயிகள் பேரணி நடத்தினர். அப்போது காரை ஓட்டி வந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அசீஷ் மிஸ்ரா, கட்டுப்பாட்டை இழந்து 4 விவசாயிகள், 1 பத்திரிக்கையாளர் உட்பட 5 பேர் மீது வாகனத்தை ஏற்றியதில் சம்பவ இடத்திலேயே 5 பேரும் உயிரிழந்தனர்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அசிஷ் மிஸ்ரா அக்டோபர் 9ம் தேதியன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆசிஸ் மிஸ்ரா ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜனவரி 10ம் தேதியன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் பிப். 17ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வழக்கறிஞர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றம் அசிஷ் மிஸ்ராவுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 21ம் தேதி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி, நேற்று இரவு லக்கிம்பூர் கேரி வழக்கின் சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதனால் இவ்வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தார்.









