நெல்லை அருகே கோயில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை சுத்தமல்லி அடுத்த பழவூரில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை விழாவில் காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரெட் திரேஷா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இளைஞர் ஒருவர் அவரது கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுமாயமடைந்த காவல் ஆய்வாளர் மார்க்கரெட் திரேஷா, நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் சேரன்மகாதேவி டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, கத்தியால் குத்திய ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அந்த நபர் மதுபோதையில் வந்தபோது காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரெட் திரேஷா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாகவும், அதன் காரணமாக கத்தியால் குத்தியதும் தெரியவந்துள்ளது.
திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன்.
தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) April 23, 2022
இதனிடையே, தாக்குதலுக்கு உள்ளான காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.







