குலசை தசரா விழா: காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் வீதி உலா!

குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவில், 5-வது நாளில் அம்பாள் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு…

குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்
தசரா திருவிழாவில், 5-வது நாளில் அம்பாள் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு,  நடைபெறும் இந்த தசரா திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறக்கூடிய தசரா திருவிழாவில் நாள்தோறும் அம்பாள் பல்வேறு அவதாரக்கோலத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்திருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், திருவிழாவின் 5-ம் நாளான நேற்று அம்பாளுக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம், மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம்
நடைபெற்று அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அம்பாள் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார்.

பின்னர், அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்று தொடர்ந்து,  அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் அம்பாளை வரவேற்கும் விதமாக வீதிகளில் பல வண்ணக் கோலமிட்டு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதனையடுத்து தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்காரம் வரும் 24-ஆம் தேதி நள்ளிரவில் கோயில் கடற்கரையில் நடைபெற உள்ளது.

ரூபி.காமராஜ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.