சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 பட்டாசு கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற இரு வேறு
பட்டாசு வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு விற்பனைகள்
நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில் தொடர் விபத்துக்கள் நடைபெறுவதால், விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் என பல பிரிவுகளாக சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக வைத்திருந்த மற்றும் பட்டாசு கடைகளின் அருகிலேயே உரிமம் பெறாமல் குடோனில் இருப்பு வைத்திருந்த 6 பட்டாசு கடைகளை கண்டுப்பிடித்து கடைகளுக்கு சீல் வைத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூபி.காமராஜ்







