திமுக உடன் கூட்டணியைத் தொடர்வதா, இல்லையா என்பதை தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி, சென்னை
சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செல்வகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, “ராஜீவ்காந்திக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கும் உறவு அவர் வந்து இங்கு இறந்ததுதான். சீமான் வேடிக்கையாகப் பேசுவதில் வல்லவர், தற்போது பேசியதில் அறியாமையும், பதற்றமும் இருக்கிறது. யார் தியாகம் செய்தது. யார் மற்றவரிடம் கையேந்தி நிற்கிறார் என்பது மக்களுக்குத் தெரியும்.
ஒரு பச்சை மிளகாய், ஒரு கால் டம்ளர் பால் கூட சீமான் ஈழத் தமிழர்களுக்கு
செய்தது கிடையாது. துடுக்குத் தனமாகப் பேசக் கூடாது. ஆனால், ஈழத்தமிழர்களுக்கு
உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் ராஜீவ் காந்தி. சீமானுக்கும், பிரபாகரனுக்கும் தொடர்பு கிடையாது, ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை என்று நான் சொல்லவில்லை அவருடன் நெருங்கிப் பழகிய பல்வேறு நபர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு சீமான் என்ன செய்தார். தமிழகத்துக்கு காங்கிரஸ் என்ன செய்தது
என்று சீமான் கேட்கிறார்? அதற்கு பதில், நீங்கள் இவ்வளவு பேசுவதே எங்களைத்தான். கொச்சையான, பச்சையான பேச்சால் விளம்பரம் தேடிக் கொள்பவர் சீமான்.
பேரறிவாளன் விடுதலையை ஏற்றுக் கொள்ள முடியாது. கொலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை, அப்பாவி என்றோ அவரை விடுதலை செய்யவில்லை. சட்டத்தில் இருக்கும் நுணுக்கம் அவரை விடுதலை செய்துள்ளது. இது யார் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்ற நிலைக்குத் தள்ளும்.
சீமான் துடுக்குத்தனமான பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால்
நாங்களும் பேசுவோம்.காங்கிரஸ் கட்சியினர் தனிப்பட்டு தனி ஒருவர் ராஜினாமா செய்வது கட்சியின் நிலைப்பாடாக இருக்காது. பேரறிவாளன் விவகாரத்தில் திமுக உடன் கூட்டணி தொடர்வதா, இல்லையா என்பதை தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்றார்.








