அரசுப் பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு
வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே Spoken English பயிற்சி வழங்க
பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளையும், அரசுப் பள்ளி மாணவர்களின் திறனையும்
மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைப் பள்ளிக் கல்வித் துறை எடுத்து வருகிறது.
அந்த வகையில் வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு
வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு Spoken English பயிற்சி வழங்க
பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள் போல் அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கில மொழி புலமை பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டமானது வரும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்துக்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனத்தில்
பணியாற்றும் தகுதியான ஆங்கில மொழி புலமை மிக்க ஆசிரியர்களைத் தேர்வு செய்து
அவர்களுக்கு மாணவர்களிடம் எவ்வாறு Spoken English வகுப்பெடுக்க வேண்டும்
என்பது குறித்து விளக்குவதற்காக வரும் 30, 31ஆம் தேதிகளில் பயிற்சி வகுப்பு
நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
அண்மையில் ஆந்திரத்தில், அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியுடன்,
அம்மாநில அரசுப் பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவது போலான காணொலிகள் வைரலானதைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையும் Spoken English வகுப்புகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.








