சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகள் முதல் கடலோர கர்நாடகா வரை கடலோர ஆந்திரா பிரதேசம், தெலங்கானா மற்றும் உள் கர்நாடகா வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




