சர்வதேச தேநீர் தினத்தில் தேநீர் குறித்த சுவாரசிய தகவல்களை குறித்து இங்கு பார்ப்போம்.
உலகெங்கிலும் உள்ள மக்கள் அதிகமாக அருந்துவது தேநீர் தான். ஆசியா முழுவதும் பொதுவான ஒரு பானம் உண்டெனில் அது தேநீர் என்று சொல்லலாம். ஆமாம் மக்களே இன்று தேசிய தேநீர் தினம். உள்ளத்தையும், உடலையும் உற்சாகமாக வைக்கின்ற உற்சாக பானமாக தேநீர் இருந்து வருகிறது. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவருக்கும் சமமான ஒரு பானமாக தேநீர் இருந்து வருகிறது.
இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கும் அம்பானியின் மனைவி நீடா அம்பானி காலையில் குடிக்கும் தேநீரின் விலை 3 லட்ச ரூபாயாகும். மிகவும் உயர்ந்த ரக தேயிலையை கொண்டு இந்த தேநீர் தயாரிக்கப்படுகிறது.
சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை தேடும் நபர்களின் பசியை போக்குவதும், மார்க்கெட்டிங் வேலை செய்யும் இளைஞர்களின் பிரதான பானமாக இருப்பதும் தேநீர் தான். வீடுகளுக்கு வரும் விருந்தாளியை வரவேற்பது முதல் டீக்கடையில் நண்பர்கள் சந்திப்பு வரை தேநீர் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
பொதுவாக தேநீர் என்பது சென்னையின் பிரதான பானம். மற்ற நகரங்களை விட இங்கு மக்கள் தொகை அதிகமாகவும், அதற்கேற்றாற்போல் டீக்கடைகளும் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் நிச்சயம் சென்னையின் எந்த கடைகளிலும் தேநீர் ஒன்றுபோலவே இருக்காது என்று யாரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லாமே தேநீர்தான். ஆனால் அதில் நுணுக்கமாக வேறுபாடு இருக்கிறது.
இந்த தேநீர் இந்தியாவில் சாயா என்றும் சாய் என்றும் பொதுவாக அழைக்கப்படுகிறது. இது சீனாவின் சாசுய் (cháshù) என்கிற சொல்லிருந்து தோன்றி இருக்கலாம் என கருதப்படுகிறது. பெயர் எங்கிருந்து வந்திருந்தாலும் அதை கொண்டாடுவதில் நாம்தான் முதலிடத்தில் உள்ளோம். உலகிலேயே அதிகமாக தேநீர் குடிக்கும் இடத்தில் இந்தியா தான் முதல் இடம் வகிக்கிறது.
தற்போதைய காலத்தில் மக்களின் வாழ்வுக்கு ஏற்ப தேநீர்களின் வகைகளும் அதிகமானது. ஆர்கானிக் டீ ,கிரீன் டீ , இஞ்சி டீ , ஒயிட் டீ , ஹூலாங் டீ , பிலாக் டீ , மேலும் நவீன கால இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் சாக்லேட் டீ, பாதாம் டீ போன்ற எண்ணற்ற வகை தேநீர்களும் தோன்றி உள்ளன. இதனால் தேநீர் குடிக்காத மக்களும் தேநீர் குடிக்க ஆரம்பித்துள்ளனர்.
இப்படியான சிறப்புமிக்க தேநீர் தோன்றியது எப்படியென சரியாக தெரியவில்லை என்றாலும் கூட சில புராணக் கதைகள் உள்ளன. கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்கு முன் சென் நங் (Sen Nung) என்ற சீன மன்னர் ஒரு மரத்தின் அடியில் அடுப்பு மூட்டி வெந்நீர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த மரத்திலிருந்து சில இலைகள் அவரின் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த நீரில் விழுந்தது. அந்நீர் அருந்துவதற்கு சுவையாகவும், நறுமணமாகவும் இருந்தது. இது இவ்வாறு தொடங்கி பரிணாம வளர்ச்சியடைந்து தற்போதைய நவீன காலத்து தேநீராக உருமாறி நின்றுகொண்டிருக்கிறது.
சீனாவில் ஒரு வழக்கம் உள்ளது. அதன்படி அங்கு குங்ஃபு கற்பவர்கள் தொடர் பயிற்சியில் ஈடுபடுவார்கள். அப்போது சில போட்டிகள் நடக்கும். இப்போட்டிகளின் முக்கிய விதி, போட்டியாளர்கள் தன்னுடைய சக போட்டியாளர்களை தாக்கக்கூடாது. ஆனால் சில சமயம் விதி விலக்காக மூத்த ஆசிரியர்களே எதிராளியை தாக்குவதுண்டு.
இவ்வாறாக ஏதும் நிகழும்போது அந்த ஆசிரியர்கள் தானாக அங்கிருந்து வெளியேறி விடுவார்கள். அவர்கள் எவ்வளவு கற்றவர்களாக இருந்தாலும் இந்த சம்பவத்திற்கு பின்னர் வேறு எந்த தொழிலையும் மேற்கொள்ளமாட்டார்கள்.
அவர்கள் பாத்திரம் கழுவுவதை மட்டுமே தொழிலாக மேற்கொள்வார்கள். பெரும்பாலும் தேநீர் நிலையங்களில் தான் இப்பணியை அவர்கள் மேற்கொள்வார்கள். இதன் மூலம் தங்களுடைய மனதில் உள்ள அழுக்குகளையும் அவர்கள் கழுவுவதாக தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள்.
ஆக ஒரு சாதாரண தேநீருக்கு இவ்வளவு பெரிய வரலாறு உண்டு. அதுமட்டுமல்லாது ஆங்கிலேயர்கள் வணிக நோக்கத்திற்காக தேயிலையை பயன்படுத்திய விதம், செழிப்பான நிலப்பரப்பில் தேயிலையை மட்டுமே பயிரிட்டு மண் வளத்தை கெடுத்தது, அதற்கான ஆட்களை அடிமைகளாக இலங்கை போன்ற நாடுகளுக்கு கொண்டு சென்றது என தேநீரின் வரலாறு நீண்ட நெடியதாகும்.











