கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமென வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக காவல்துறை 2 நாட்களாக நடத்திய விசாரணைக்கு தாம் முழு ஒத்துழைப்பு வழங்கி அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோடநாடு பங்களாவை தாங்கள் அனைவரும் கோயிலாக பார்த்ததாகவும், அங்கு விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்ற சமயத்தில் தான் சிறையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள சசிகலா, காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு, வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த காவலாளி ஓம் பகதூர் மற்றும் தாய், குழந்தை ஆகியோருடைய மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.







