கேரளாவில் மலையேற்ற பயிற்சியின் போது ஆபத்தான பள்ளத்தில் தவறி விழுந்த இருவரை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்டனர்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கருவரகுண்டு பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சியின் மேலே உள்ள மலை உச்சிக்கு செல்ல கேரளாவை சேர்ந்த நண்பர்கள்
யாசீம், அஜ்மல், ஷம்னாஸ் ஆகியோர் முடிவு செய்து காலையில் மலை உச்சிக்கு சென்றுள்ளனர். இவர்கள் அங்குள்ள நீர்விழ்ச்சியினை கடந்து அதன் மேலே ஏறிக்கொண்டிருந்த போது யாசீம் மற்றும் அஜ்மல் ஆகிய இருவரும் அங்குள்ள இரண்டு பாறைக்கு நடுவில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பலத்த காயமடைந்தனர்.
காயம் காரணமாக இருவரும் பள்ளத்தை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஷம்னாஸ் மலையடிவாரத்தை விட்டு கீழே இறங்கி அந்த பகுதியில் உள்ள
பொதுமக்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்து அவர்களை உதவிக்கு அழைத்த நிலையில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சிலர் பள்ளத்தில் மாட்டி கொண்டு இருந்தவர்களை மீட்பதற்காக மலை உச்சியினை நோக்கி
செல்லும் போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
மழையினையும் பொருட்படுத்தாமல் சுமார் 4 மணி நேர பயணத்திற்கு பின்னர் மலை உச்சியினை அடைந்து அங்குள்ள பள்ளத்தில் மாட்டி கொண்டவர்களை மீட்க கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கி அவர்களை மேலே கொண்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் ஸ்டெச்சரில் படுக்க வைக்கப்பட்டு மலை உச்சியில் இருந்து கீழே இறங்கினர். பின் அவர்கள் அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
—-ரெ.வீரம்மாதேவி







