டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சிபிஐ அதிகாரிகளால் கடந்த பிப்ரவரி 26ம் தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 5 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, சிசோடியாவின் சி.பி.ஐ. காவல் 2-வது முறையாக 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சிசோடியாவின் காவல் நேற்று முடிவடைந்த நிலையில், அவரை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று ஆஜர்படுத்தினார்கள். அப்போது, சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்குக் கைது கட்டாயமாக இருந்தாலன்றி, அதைத் தவிர்ப்பதே விரும்பத்தக்க செயலாக இருக்கும். பொதுவெளியில் வரும் தகவல்களின்படி, சிசோடியா வழக்கில் பணம் பறிமுதல் போன்ற குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை.
அண்மைச் செய்தி : உலகின் மிகப் பெரிய எலெக்ட்ரிக் கார் ஆலையை நிறுவும் டெஸ்லா – எங்கே?
அரசியல் காரணங்களுக்காக சிசோடியா குறிவைக்கப்படுகிறார் என்ற பரவலான கருத்து தகர்த்தெறியப்பட வேண்டியது முக்கியமானது. கூட்டாட்சி கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதால், சம்பந்தப்பட்ட யார் மீதும் அதிகப்படியான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமரின் வழிகாட்டுதல் தற்போதைய நிலையை மாற்றுவதற்கு பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.