கேரள குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியானது. குண்டு வெடித்த பின்பு, தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. தகவலறிந்த பின், தீயணைப்பு மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தவிரப்படுத்தினர். விசாரணையில், களமசேரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் IED(Improvised Explosive Device) ரக குண்டு பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு டிபன் பாக்ஸில் IED வைத்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன என கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கேரளாவில் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டுள்ளது. இதனால் விசாரணை மேலும் தீவிரம் அடைந்துள்ளது.







