கரூர் வழக்கு : செந்தில் பாலாஜியிடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு..!

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவுடைந்துள்ளது

கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் நடிகரும் தவெக தலைவருமான விஜயிடம் இருமுறை விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக நேற்று முன் தினமும் அவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

இதற்கிடையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ தரப்பில் நோட்டீஸ் அனுப்ப்பட்டது. அதன் படி நேற்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு வந்தடைந்த செந்தில் பாலாஜி இன்று காலை 11 மணிக்கு சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை தொடர்ந்து 6 மணி நேரம் வரை நீடித்தது.  இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி மீது தவெக முன்வைத்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவுடைந்துள்ளது. தொடர்ந்து அவருக்கு நாளை விசாரணை இல்லை எனவும் இரவே அவர் சென்னைக்கு வந்து விடுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.