கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு இரண்டாம் கட்ட நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக, புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட சங்குமணியை, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சந்தித்தார். அப்போது, மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தடுப்பூசி தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகக் கூறிய அவர், எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கே இரண்டாம் கட்ட நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.







