“காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது” – டிடிவி தினகரன்!

“காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கான திட்டமிடல் பணிகளும்,…

“காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கான திட்டமிடல் பணிகளும், நிலம் எடுத்தல் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது x தளத்தில் கூறியுள்ளதாவது:

“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இறுதி உத்தரவிற்கு முரணாக காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என்ற கர்நாடக மாநில ஆளுநர் அவர்களின் குடியரசு தின உரை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்: காவல்துறை அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம் – திருப்பூர் எஸ்.பி. சாமிநாதன் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை!

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.

காவிரியின் குறுக்கே கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருந்தாலும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

போதிய நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசினாலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உரிய நீரை பெற்றுத் தர முடியாத திமுக அரசினாலும் டெல்டா பகுதி விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கில் கட்டப்படும் மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/TTVDhinakaran/status/1751165198222905408

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.