கர்நாடக தேர்தல் : ஓபிஎஸ் அணி வேட்பாளரை அதிமுக வேட்பாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளரான குமாரின் பெயருக்கு நேராக கட்சி என்ற இடத்தில் அதிமுக என குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அவரை அதிமுக வேட்பாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜனதா…

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளரான குமாரின் பெயருக்கு நேராக கட்சி என்ற இடத்தில் அதிமுக என குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அவரை அதிமுக வேட்பாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் புதியதாக 16-வது சட்டசபை தேர்வு செய்வதற்காக கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. வேட்பு மனு பரிசீலனை இன்று நடைபெற்றது.

இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். புலிகேசி நகரில் அன்பரசன் அதிமுக வேட்பாளாக அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அன்பரசன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் புலிகேசி நகர் தொகுதி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த வேட்பாளர் டி.அன்பரசனின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு வேட்பாளர் நெடுஞ்செழியன் வேட்புமனு முறையாக பூர்த்தி செய்யாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும், காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி வேட்பாளர் குமாரின் வேட்புமனுவும், கோலார் தங்க வயல் தொகுதி வேட்பாளர் ஆனந்தராஜின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது. இதில், கோலார் தங்க வயல் தொகுதி வேட்பாளர் ஆனந்தராஜ் பி. படிவம் தாமதமாக வழங்கியதால் அவர் சுயேட்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வேட்பாளர் பெயர் பட்டியலில், காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி வேட்பாளரான குமாரின் பெயருக்கு நேராக கட்சி என்ற இடத்தில் அதிமுக என குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அவரை அதிமுக வேட்பாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

நேற்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், இன்று கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் குமாரை அதிமுக வேட்பாளராக தேர்தல் ஆணையம் அங்கீரித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.