எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு!

நாடளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. thoடங்கிய நாளன்றே எதிர்க்கட்சிகள் நீட் தேர்வு குளறுபடி, மாண்வர்கள் போராட்டம் உள்ளிட்ட விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடர்ந்தது.

இதனிடையே நீட் குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இதனால் மாணவர்கள் போராட்டம் வெற்றிபெற்றது.

இந்த நிலையில் நேற்று காலை நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடியதும் நாடாளுமன்றம் நோக்கி பேரணி வந்த மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று மதியம் 12 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றம் கூடியது. அப்போது, தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா பெரும் அமளிக்கு இடையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற இருந்த நிலையில் நாடாளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சிகள் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டுத்து மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் இன்று மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.