திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 33-அவது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது, இதில் ஆளுநர் அர்லேக்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இந்த நிலையில் விழா தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 3-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சமூக நீதித் துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ அன்னைத்தமிழுக்கு வாழ்த்துப்பா படைத்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே தமது தமிழ் வெறுப்பு கலகத்தை தொடங்கியுள்ளது. இன்று மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார் தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் விசுவநாதன். இவரோடு சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களும் பல மாணவர்களும் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியது.
ஆளுனரின் தமிழர் விரோதப்போக்கு ஏற்புடையதல்ல. அவரவர் தாய்மொழிக்கு முன்னுரிமை தராமல், வந்தேமாதரம் மூலம் போலி தேசபக்தியை கட்டமைக்க முனைவது அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானதாகும். இதைத்தான், நேரு காலத்திலிருந்து இப்போதுவரை #RSS கும்பல் செய்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியும் வந்து சேரவில்லை. தமிழ்மொழிக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மறுத்து சமற்கிருதத்துக்கு ஒதுக்கும் வஞ்சனை.
காவிரியிலிருந்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நீரையும் திறந்து விடுவதில்லை. எல்லாவற்றிலும் ஒன்றிய பாஜக அரசு கள்ள மவுனமே காக்கிறது. இந்த சூழலில், வந்தே மாதரம் மட்டும் திணிப்பது சரியா? தமிழ்நாட்டின் உணர்வுகளை புறக்கணிக்கும் ஆளுனர் மாளிகையின் தமிழர் விரோதப்போக்கு கண்டனத்துக்குரியதாகும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




