கர்நாடகாவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைப்பேசி வாயிலாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும்போட்டி நிலவியது.
இருவரும் டெல்லிக்குச் சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசினர். அதைத்தொடர்ந்து, ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த 3 நாட்களாக முதலமைச்சரை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்ட நிலையில், நிலையில், இன்று காலை இழுபறி முடிவுக்கு வந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார். ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர். பெங்களூருவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கலந்து கொண்வதற்காக எதிர்க்கட்சியினருக்கும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ஜல்லிக்கட்டு தீர்ப்பு : எடப்பாடி பழனிசாமி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!!
இந்நிலையில், பெங்களூரு இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளனர்.
கர்நாடகா செல்லும் முதலமைச்சர்…
இதனிடையே, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நாளை இரவு விமானத்தில் சென்னையிலிருந்து பெங்களூரு சென்று, மே 20 ஆம் தேதி கர்நாடக அமைச்சரவை பதவியேற்பில் கலந்து கொண்டு, மாலை சென்னை திரும்பும் வகையில் முதலமைச்சரின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் மே 20 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெங்களூரு பயணத்தால் தள்ளி வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.







