ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பினை வரவேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட காளைகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விரிவாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். கோடை விடுமுறை வரும் சனிக்கிழமை முதல் தொடங்க உள்ள நிலையில் இன்று ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில், நீதிபதிகள் அஜய் ரஸ்தோஹி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பினை வாசித்தது.
இந்த தீர்ப்பில் “ இந்த விவகாரத்தில் எங்களுக்கு அனுப்பப்பட்ட ஐந்து கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு என்பதை நாங்கள் ஏற்கிறோம. ஜல்லிக்கட்டு தொடர்பாக எங்களுக்கு கொடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.
ஜல்லிக்கட்டு பாரம்பரியம், கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்தது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்தது என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு சட்டம் காளைகளுக்கு ஏற்படும் கொடுமையை பெரும்பான்மையாக குறைத்துள்ளது. கலாச்சாரம் என்ற வகையில் இருந்தாலும் கூட அதில் துன்புறுத்தல் என்று வரும் பொழுது அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை, தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உச்சநீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது.
உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பினை வரவேற்கும் விதமாக பல இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். பல அரசியல் கட்சிகளும் தீர்ப்பினை வரவேற்று வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.