தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் பகுதியைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனைக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான ஸ்போர்ட்ஸ் சைக்கிளை திமுக கனிமொழி எம்.பி. வழங்கி ஊக்கப்படுத்தினார்.
ஒட்டபிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி பகுதியைச் சேர்ந்த ஜே.ஸ்ரீமதி, 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார் இவர் சைக்கிள் பந்தயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் மாநில அளவிலான சைக்கிள் பந்தயப் போட்டிக்கு இவர் தேர்வு செய்யப்பட்டார். இவரது தந்தை விவசாயி ஆவார். மகளுக்கு சைக்கிள் பந்தயத்தில் அதீத ஆர்வம் இருந்தாலும் வறுமை காரணமாக அவரால் ஸ்போர்ட்ஸ் சைக்கிளை வாங்கித் தர முடியவில்லை. இதனால் மாநில அளவிலான போட்டியில் அவர் ஸ்ரீமதியால் பங்கேற்க முடியாமல் போனது.
இந்நிலையில் தான் அந்த மாணவி, கனிமொழி எம்.பி.யை சந்தித்து ஸ்போர்ட் சைக்கிள் வாங்கித் தருமாறு கோரியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பிலான ஸ்போர்ட் சைக்கிள் வாங்குவதற்கு கனிமொழி எம்.பி. உதவியிருக்கிறார். அந்த சைக்கிளைப் பயன்படுத்தி ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் சைக்கிள் பந்தயப் போட்டியில் குழுப் பிரிவில் தங்கமும் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று திரும்பினார் ஸ்ரீமதி.
கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் குழு பிரிவில் மூன்றாவது இடம் பிடித்தார் ஸ்ரீமதி. இதன்மூலம், சர்வதேச ஜூனியர் சைக்கள் பந்தயத்திற்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். சர்வதேசப் போட்டிக்கு இதே சைக்களை ஸ்ரீமதியால் பயன்படுத்த முடியாது என்பதால் மீண்டும் கனிமொழி எம்.பியை சந்தித்து உதவி கோரியிருக்கிறார்.
அவரது கோரிக்கையை ஏற்று ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை ஸ்ரீமதிக்கு கனிமொழி வழங்கினார். அத்துடன், ஹெல்மட், ஷூக்கள், கிளவுஸ் போன்ற உபகரணங்களையும் வழங்கி உதவினார். அப்போது சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவனும் உடனிருந்தார்.
“மாநில அளவிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நான் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்வேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. கனிமொழி எம்.பி. உதவியதால் தமிழ்நாட்டிற்கு பதக்கத்தை கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றேன். தற்போது ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை எனக்கு அவர் வாங்கிக் கொடுத்திருக்கிறார். நான் கடுமையாக பயிற்சி செய்து பதக்கத்தை வென்று அதை கனிமொழி எம்.பி.க்கு சமர்ப்பிப்பேன்” என்கிறார் ஸ்ரீமதி.
சர்வதேச ஜூனியர் சைக்கிள் பந்தயப் போட்டி இஸ்ரேலில் ஆகஸ்டு மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.








