எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, தனது பரப்புரையை கேரளாவிலிருந்து நேற்றுத் தொடங்கினார். 11 பேர் கொண்ட பரப்புரைக் குழுவுடன் கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டினார். நண்பகலில் சென்னை வந்த யஷ்வந்த் சின்ஹாவிற்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில், திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அவரை முதலமைச்சர் வரவேற்றார். ஜனநாயக அமைப்பின் உயர் பதவியில் போட்டியிடக்கூடிய யஷ்வந்த் சின்ஹாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை விளக்கும் அடையாளம் யஷ்வந்த் சின்ஹா என்று கனிமொழி எம்.பி. புகழாரம் சூட்டினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய ஆட்சி என திசைகாட்டியாக ஸ்டாலின் விளங்குகிறார். முழு மனதுடன் யஷ்வந்த் சின்காவிற்கு ஆதரவு அளிக்கிறோம்” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி, “ஒரு சாதாரண தேர்தல் அல்ல. மதவெறி சக்திகளுக்கும், மதச்சார்பற்ற சக்திகளுக்குமான மாபெரும் போராட்டம்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி ராமச்சந்திரன், “மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர் யஷ்வந்த் சின்ஹா” என்றார்.
“இந்திய அளவில் சமய சார்பின்மையை காக்கும் இடமாக தமிழ்நாடு திகழ்கிறது.
அரசியல் தலைமையாக டில்லி இருந்தாலும், கருத்தியல் தலைமையாக தமிழ்நாடு விளங்குகிறது. அரசியல் அமைப்பை பாதுகாக்கும் தாகத்துடன், சமூக நீதியின் அடையாளமாக யஷ்வந்த் சின்ஹாவை பார்க்கிறோம்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ சிந்தனை செல்வன் தெரிவித்தார்.
திமுக எம்.பி. திருச்சி சிவா கூறுகையில், “மாநில சுயாட்சி, சமூக நீதிக்காக நிற்கிறார் யஷ்வந்த் சின்ஹா. 159 சட்டமன்ற உறுப்பினர்கள், 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என எதிர்க்கட்சிகள் தரப்பில் அதிக வாக்குகள் கொண்ட இடமாக தமிழ்நாடு விளங்குகிறது” என்றார்.
யஷ்வந்த் சின்கா பேசுகையில், “ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி. பாஜக அரசு கூட்டாட்சி அமைப்புக்கு எதிராக செயல்படுகின்றது. மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்த்துள்ளது பாஜக. புதியதாக பொறுப்பேற்கும் அரசு நீண்ட நாள் நீடிக்காது.
இந்துத்துவாவைப் பற்றியே மீண்டும் மீண்டும் பாஜக பேசி வருகின்றது. தமிழ்நாட்டில் ஆளுநரின் செயல்பாடுகள் வருத்தம் தரும் வகையில் உள்ளது. அரசியல் அமைப்பை சிதைக்கும் வகையில் மத்திய அரசும், ஆளுநர்களும் செயல்படுகிறார்கள்.
ஆளுநர்கள் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசுகளை மதித்து நடக்க வேண்டும், ஆளுநர்கள் மாநில அரசை அவமதிக்கும் போக்கை தடுத்து நிறுத்துவேன்” என்றார்.