தாம்பரம் அருகே சாலையோர கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் மீது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் நாகராஜ்(57). இவர் வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்தார். இவர் நேற்று நள்ளிரவு சென்னையில் நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தனது ஆதரவாளர்களுடன் இரண்டு கார்களில் தாம்பரம் நோக்கி வந்துக் கொண்டிருந்தார். கார் காமராஜபுரம் சாலையில் வந்து கொண்டிருந்த போது அனைவரும் சாப்பிடுவதற்காக காரை நிறுத்தினர்.
நாகராஜ் சைவம் என்பதால் மற்ற அனைவரும் அருகில் சாப்பிட்டு கொண்டிருக்க நாகராஜ் அங்குள்ள தள்ளுவண்டி கடையில் சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அதே கடையில் மினி வேன் ஒட்டுநர் ஒருவர் தனது நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்துவிட்ட ஒட்டுநர் மினி வேனை ஓட்டுவதற்காக ஆன் செய்த போது ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதால் எதிரே சாப்பிட்டு கொண்டிருந்த நாகராஜ் மீது பலமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் படுகாயமடைந்தார்.உடனடியாக அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய மினி வேன் ஓட்டுநர் தப்பிச் சென்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பள்ளிகரணை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திட்டமிட்டு நடந்த கொலையா?அல்லது ஏதேற்சையாக நடந்ததா?என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேந்தன்







